Thursday, October 07, 2004

என். சொக்கன்

*******************************************************************
வி. எஸ். நைபால் பற்றி குஷ்வந்த் சிங் (தோராயமாய், 1995ல் எழுதப்பட்டது !)
*******************************************************************

இப்போது எழுதுகிறவர்களில் சிறந்தவராக நான் கருதுவது வி. எஸ். நைபாலைதான்.

நான் முதலில் படித்த அவருடைய நாவல், 'A House for Mr. Biswas', அப்போது அவரை ஆங்கில இலக்கியத்தின் வளரும் நட்சத்திரம் என்று வர்ணித்துக்கொண்டிருந்தார்கள்.

தன்னுடைய முன்னோர் வாழ்ந்த இடங்களைப் பார்க்க விரும்பிய நைபால், இந்தியா வந்தார். அவரோடு அவரது ஆங்கிலேய மனைவியும் வந்திருந்தார்.

அவரது சொந்த ஊர் நிலங்களையெல்லாம் பார்த்துவிட்டு, அவர்கள் இருவரும் டெல்லி வந்தபோது அவர்களது முகத்தில் ஏமாற்றம் அல்லது ஏதோ ஒரு பிம்பம் கலைந்துவிட்டதைப்போன்ற வெறுமையுணர்வு வெளிப்படையாய்த் தெரிந்தது !

இந்திய மண்ணின் மைந்தனாக தன்னை உருவகப்படுத்தி எல்லோரும் பாராட்டு மழைகளைப் பொழிவார்கள் என்று நைபால் எதிர்பார்த்திருந்தாரோ என்னவோ, சொந்த ஊரில் தனக்கிருக்கிற புகழை, தன் மனைவியின் முன் நிரூபிக்கவேண்டும் என்று அவர் விரும்பியிருக்கலாம். அவர்கள் இருவருக்குமே ஏமாற்றம்தான் கிடைத்தது - ஏனென்றால், அப்போது இந்தியாவில் நைபாலைப் படித்திருந்தவர்கள் மிகச்சிலரே !

அந்தப் பயணத்தின்போது நான் அவர்களுக்கு வழிகாட்டியாக பணியாற்றினேன். அவரைப் படித்திருந்த என் நண்பர்களிடமும், அவரது புத்தகங்கள் நன்கு விற்ற கடைகளுக்கும் அவர்களைக் கூட்டிப்போய், நைபாலின் சரிந்திருந்த இமேஜை, ஓரளவு சரிபண்ண முயன்றேன் !

நாங்கள் Suraj Kund சென்றோம். அப்போது, அங்கிருந்த அழகிய பள்ளத்தாக்கையும், பழைய டில்லியின் பூக்கள் நிரம்பின அழகையும் விட்டுவிட்டு, பக்கத்து கிராமத்திலிருந்து வந்திருந்து, அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஏழைச் சிறுவர்களைப்பற்றிதான் விரிவாக கவனித்து எழுதினார் நைபால் !

ரொம்பவும் கூச்ச உணர்வுடையவர் நைபால். அவரை யாராவது தொட்டால் அப்படியே சுருங்கிப் போய்விடுவார், யாராவது அவரைக் கட்டியணைத்து வரவேற்றால், கேட்கவே வேண்டாம் ! அவருக்கு ஆகாத இன்னொரு வி"யம் - கேமெராக்கள், அவரை யார் ஃபோட்டோ எடுத்தாலும் அவருக்குப் பிடிக்காது !

ஆனால், வெளியே செல்வதென்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்கும், அப்படிச் சந்திக்கிற மனிதர்கள்தான் அவருடைய அடுத்தடுத்த புத்தகங்களாகிறார்கள் !

நைபால் மீண்டும் இந்தியா வந்தபோதெல்லாம், அவர் எதிர்பார்த்த பாராட்டுகளும், புகழும் அவருக்குக் கிடைத்தது.

வி. எஸ். நைபாலுக்கு நோபல் பரிசு கிடைக்கப்போகிறது என்ற செய்தி பலமுறை இங்கிலாந்து மீடியாக்களில் அடிபட்டது. குறிப்பாக, நியூயார்க் டைம்ஸ் இதழின் ஆசிரியர், இரண்டு முறை என்னைத் தொலைபேசி அழைத்து, நைபால்பற்றிய கட்டுரையைத் தயார் செய்துவைக்குமாறு சொல்லியிருந்தார், இரண்டு முறையுமே, 'இந்த வருடம் அவருக்குதான் நோபல்' என்று அடித்துச் சொன்னார் அவர், நானும் என் கட்டுரைக்கான ஏற்பாடுகளைச் செய்துவைத்தேன் - ஆனால் ஏனோ, தகுதியுடைய அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவேயில்லை !

ஆங்கிலத்தில் எழுதினாலும், அவர் ஒரு கறுப்பர் என்பதால்தான் அவருக்கு நோபல் கொடுக்கப்படவில்லை என்று தோன்றியது அப்போது. இங்கிலாந்து அரசாங்கம் அவருக்கு 'சர்' பட்டம் வழங்கியது, ஆனால் அவர் எப்போதும் அந்தப் பட்டத்தைத் தன் பெயருக்குமுன் பயன்படுத்திக்கொள்ளவில்லை !

இதில் வேதனையான வி"யம் என்னவென்றால், இந்த ஏமாற்றங்களினால், தனக்கு நோபல் பரிசு கிடைக்கப்போவதே இல்லை என்று முடிவுசெய்துவிட்டாரோ என்னவோ, அவருடைய எழுத்தின் தரம் தானாய்க் குறைந்துவிட்டது !

நைபாலின் அம்மாவையும், அவரது தம்பி சிவாவையும்கூட எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர்களுடன் பேசியபிறகு, அவர்கள் இருவருடனுமே வி எஸ் நைபால் அதிக நேரம் செலவிட்டதில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது ! அதனால்தானோ என்னவோ, நைபாலின் அம்மாவுக்கு சிவாவைதான் அதிகம் பிடித்திருந்தது. புத்தகக் கடைகளில் வி எஸ் நைபாலின் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு, 'நீங்கள் என் மகன் சிவாவின் புத்தகங்களை ஏன் அதிகம் விற்பதில்லை ?' என்று அவர்களிடம் கேட்பார் நைபாலின் அம்மா. அவருக்கு ஏனோ இந்தியா பிடிக்கவேயில்லை, ஆனால் சிவாவுக்கு இந்தியா ரொம்பவே பிடித்திருந்தது !

- 'Truth, Love and a Little Malice' புத்தகத்திலிருந்து

No comments: