இந்தியாவுக்கு 1962-இல் முதல் வருகை. 'இருண்ட பிரதேசம்' (அன் ஏரியா ஆ·ப் டார்க்னெஸ்) என்றும் முதல் பயணத் தொகுப்பு பரந்த வாசிப்பைப் பெற்றது. இந்தியாவைப் பற்றி ஒரு மேற்கத்தியப் பார்வையாக அது இருந்த்து. இருபத்தி ஏழு வருடம் கழித்து 1989-இல் மீண்டும் செல்கையில் ஒரு மாறுபட்ட நாட்டை பார்க்க நைபால் நேரிடுகிறது.
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், வளரும் பங்குச் சந்தையும், புதிய அடுக்கு மாடி கட்டிடங்களும் ஒரு வளரும் சமுதாயத்தை சுட்டுகிறது. நய்பால் சந்திக்கும் மனிதர்களின் மூலமாக சமுதாயத்தின் கதையை சொல்கிறார்
வெற்றிப் பெற்ற முதலாளியின் அலுவலகத்தில் உள்ள மினி கோவில், வாழ்க்கையை வெறுத்து ஞானம் அடைந்ததாகப் பகர்ந்த பழைய நண்பன், சூறையாடப்பட்ட சில மணித்துளிகளில் நிவாரண நிதி கொடுக்கச் செல்லும் மத்திய அமைச்சராக விரைந்து சென்று பார்த்த சீக்கியரின் வயல் என காட்சிகளை ஒவியமாக்கிச் செலகிறார்.
இந்தியாவெங்கும் காணப்படும் வேறுபாடுகள், பிராமண எதிர்ப்பு, பிரிட்டிஷ் எதிர்ப்பு, அரசாங்கத்தின் மேல் சலிப்பு என பல கலகங்களின் மூலம் இந்தியாவைப் பதிவு செய்வது 'இந்தியாவில் இப்பொழுது ஒரு கோடி கலகங்கள்' (இந்தியா: எ மில்லியன் ம்யூடினீஸ் நௌ).
நய்பாலுக்கு ஜயப்பனை பிடித்திருக்கிறது. கர்நாடகாவிற்கு பஸ்ஸில் செல்லும் பொழுது பார்த்த கறுப்பு வேட்டி மனிதர்களை பார்த்து பயப்படுகிறார். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த வாபர் சாமியை கும்பிடுவதால் பிடித்திருக்கிறது.
தேவையன் என்பவர் ஜயப்ப வரலாறுகளையும், வழிபாட்டு முறைகளையும் சொல்கிறார். தேவையன் ஒரு சராசரி இந்திய பக்தரின் குறியீடு. விஞ்ஞானப் பகுதியை தினசரியில் எழுதி வருபவர். எட்டு வருடம் முன்பு கன்னி சாமியாக சென்றிருக்கிறார். கல்லூரி முடித்து ஜந்து வருடம் வெறுமையாகக் கழிந்ததால், ஒரு மாறுதலுக்காக மீண்டும் சென்றுள்ளார். மண்டல விரதம், கடுமையான பாதை, உடன் கூட்டிச் சென்றத் தோழமை, சாமிமார்களின் உதவும் மனப்பான்மையை பயணத்தின் நன்மைகளாகப் பட்டியலிடுகிறார்.
ஆனால், மகர ஜோதியை நம்பாமல் இருப்பதையும் சொல்லிச் செல்கிறார். ஒரு சிலரின் மோசடி வேலை, கஷ்டமான காட்டுப் பாதையில் காண்பிக்கப்படும் கற்பூர விளக்கு என்று வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஆனால், போய் வந்த பிறகு தேவையனின் வாழ்க்கை முன்னேறியதையும், எட்டு வருடங்களாகத் தொடர்ந்து சென்று வருவதையும் தொடர்கிறார். சொல்வது தேவையன் மட்டுமே. நய்பாலின் இடைச் செருகல்கள் இதில் எதுவுமே இல்லை.
ஆனால், அவருடன் பயணித்த ஜயப்பன்மார்களில் பலரிடம் அவர் பேச்சுக் கொடுத்திருப்பார். அவர்களில் பலரும் மகர ஜோதியின் அதிசயத்தையும், சபரி மலையின் அற்புதங்களையும் விளக்கியிருப்பதையும் நியுஸ் ஏஜென்ஸி போன்ற ரிப்போர்ட்டிங் கொடுக்கிறார். தேவையனின் வாய் வழியாக ஜயப்பனைக் காண்பிப்பதில் இந்தியர்களின் மெய்ஞான விஞ்ஞானக் கலவையையும், 'எப்பொருளிலும் மெய்பொருள் காண்பதையும்' தொட்டுச் செல்கிறார். தேவையனுக்கு இரு மதங்களின் ஒற்றுமை பிடித்திருந்தது.
வாபரை மதம் மாறச் செய்யாத ஜயப்பன் பிடித்திருக்கிறது. எல்லா ஜயப்ப சாமிகளும் வாபர் சமாதியில் மரியாதை செலுத்த வேண்டிய வழக்கம் பிடித்திருக்கிறது.
ஜயப்பனின் சமீபத்திய பெரும்புகழுக்கு நய்பால் கூறும் காரணங்களைப் பார்க்கலாம். மக்களிடம் புழங்கும் பணத்தின் அதிகரிப்பு, நன்றாக போடப்பட்ட சாலைகள், வழியெங்கும் முளைத்த கடைகள், சீர் செய்யப்பட்ட நடைபாதை, நிறையப் பேருந்துகள், ஆண்கள் மட்டும் தனியாக இன்பச்சுற்றுலா செய்யும் விருப்பம் என அடுக்கிச் செல்கிறார்.
இந்தியாவின் ஆன்மிக இயக்கங்களுக்கும் கடவுள் கோட்பாடுகளுக்கும் அறிவியல் முன்னேற்றத்துக்கும் இடையே உள்ள முரண்களை, அவருடைய ஸ்டைலில் போகிற போக்கில் சொல்லி செல்கிறார்.
ஸ்ரீனிவாசன், சுப்ரமணியன் என இரண்டு விஞ்ஞானிகளை சந்தித்த விவரம் சொல்லும் போதே அவர்களின் தாத்தாக்கள் சாஸ்திரிகளாக புரோகிதம் செய்ததை சொல்லி தன்னுடைய மெல்லிய ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
சீனிவாசன் அனு எரிசக்தி குழுவின் தலைவர். இவரின் அப்பா நாமம் போட்டுக் கொண்டு இருக்கிறார். சீனிவாசனின் தாத்தா புகைப்படத்தையும் கேட்டு வாங்கிப் பார்த்துவிட்டு விவரிக்கிறார். சட்டை இல்லாத பஞ்சகச்ச வேஷ்டி; நெற்றியின் நடுவே ஒரு மெல்லிய சிவப்பு கோடு, புருவங்களில் ஆரம்பித்து தலைமுடி வரை இருக்கும் இரு வெள்ளைக் கோடுகள் என நாமத்தை விலாவரியாக இவருக்கும் வர்ணிக்கிறார்.
நாமத்தின் தாத்பரியம், எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று நமக்கு சொல்லிக் கொண்டே தொழிற்புறட்சியில் சீனிவாசனின் பங்கை அசை போடுகிறார். சந்தியாவந்தனத்துக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை, பிராமணர்கள் ஆங்கிலப் புலமைக்கு அரசாங்க உத்தியோகங்களுக்கும் கொடுத்தார்கள் என்பதை பல உதாரணங்களினால் அவர்களின் வாயாலேயே சொல்ல வைக்கிறார்.
"சீனிவாசனின் தாத்தா சடகோபாச்சாரிக்கு எல்லா வேதங்களும் தெரியும். ஆனால், நாலணாதான் அவருக்கு புரோகிதத்தில் கிடைக்கும். அவர் மஹாராஜாவிடம் க்ளார்க்காகவும் இருந்தார். மெடரிக் மட்டுமே முடித்து இருந்ததால் கம்மி சம்பளம். அவர் மட்டும் கல்லூரி முடித்திருந்தால் மூன்று மடங்கு சம்பளம் கிட்டி இருக்கும்."
இதனால் படிப்பின் அருமையையும் ஆங்கிலத்தின் அவசியத்தையும் அவரின் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே வலியுறுத்தி வருகிறார். படிப்பு, ஆங்கில வழிக் கல்வி, கடனே என்று செய்யும் ஆகமங்கள், மூன்று வேளை இறை வழிபாடு, புரியாத சம்ஸ்கிருத வேத பாராயணம் என வளர்ந்தவர்கள் சிறந்த அறிவியல் வல்லுனர்கள் ஆகி உள்ளார்கள் என்று கருதுகிறா நய்பால்.
இந்தியாவை விவரிப்பதில் உள்ள பற்றற்ற தன்மை, மூன்றாம் மனிதனை எட்டிப் பார்த்து படம் பிடித்து, ஒவ்வொரு படத்துக்கும் தலைப்புக் கொடுக்காமல், ஃபோட்டோ ஆல்பம் காட்டுவது போல் விரிகிறது இந்தப் புத்தகப் பதிவு. மேற்கத்தியர்களைக் கட்டிப் போட்டு ரசிக்கவைத்ததற்கும் இந்த non-glorification மற்றும் non-gorification இரண்டுமே காரணம்.
Monday, October 04, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment